ஏமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட கணவரை மீட்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மனு


ஏமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட கணவரை மீட்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மனு
x
தினத்தந்தி 10 Nov 2020 4:29 AM IST (Updated: 10 Nov 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

ஏமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட கணவரை மீட்க வேண்டும் என்று, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் கோரிக்கை மனு கொடுத்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்குவார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்கின்றனர். மேலும் கலெக்டர் ஷில்பா பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். காணொலி காட்சி மூலம் கோரிக்கையை சொல்ல இயலாத பொதுமக்கள் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடுகின்றனர்.

கணவரை மீட்டுத்தர வேண்டும்

பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்மதி என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனது கணவர் மணிராஜ் மாரியப்பன் ஏமன் நாட்டில் உள்ள கப்பலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவரையும், உடன் சென்றவர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் சிறைபிடித்து உள்ளனர். அவரை மீட்டுத்தர வேண்டும் என்று கோரி நான் ஏற்கனவே பலமுறை மனு கொடுத்துள்ளேன். எனது கணவரை உடனே மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தச்சநல்லூர் தேனீர்குளத்தைச் சேர்ந்த திருமலைநம்பி என்பவர், கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு டிஜிட்டல் போர்டுடன் வந்து தனது நிலத்தை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மனு கொடுத்தார்.

தனுஷ்கோடி ஆதித்தன்

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராம்நாத், நிர்வாகிகள் காவிரி, வாகை கணேசன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்கு உரிய மருந்து நமது நாட்டில் உள்ளது. அதாவது மாசிபத்திரி என்ற மூலிகை மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம். இந்த மூலிகைச்செடி பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது என்று பல பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த செடியின் சிறப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறியுள்ளார். எனவே இந்த மூலிகை செடியை எல்லா இடங்களிலும் வளர்த்து, அதனை மருத்துவ பயன்பாட்டுக்கு மக்களுக்கு வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

காமராஜர் சமூக நல பேரவை தலைவர் நற்றமிழன் கொடுத்த மனுவில், ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், முன்பதிவு இல்லாமல் பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆதித்தமிழர் பேரவை செயலாளர் கலைக்கண்ணன், தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தமிழ் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story