காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக் குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் வெளியிட்டார்.

இந்த பட்டியலின்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 73 ஆயிரத்து 716. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 81 பேர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 461 பேர். இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 174,

ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது 1,379 வாக்குச்சாவடி மையங்களாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

சிறப்பு முகாம்

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான மனுக்கள் வருகிற டிசம்பர் 15-ந் தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்படும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மனுக்கள் தொடர்பான சிறப்பு முகாம் வருகின்ற 21, 22-ந்தேதி மற்றும் டிசம்பர் 12, 13-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் தேர்தல் அலுவலர் (பொறுப்பு) மா.நாராயணன், காஞ்சீபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் வித்யா, அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 13 லட்சத்து 2 ஆயிரத்து 10 பேர், பெண்கள் 13 லட்சத்து 19 ஆயிரத்து 714 பேர், திருநங்கைகள் 325 பேர் என மொத்த வாக்காளர்கள் 26 லட்சத்து 22 ஆயிரத்து 49 வாக்காளர்கள் உள்ளனர். முன்னதாக கலெக் டர் அலுவலகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் வெளியீட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவதால் மாவட்ட வருவாய் அலுவலர் க.பிரியா வெளியிட மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் லலிதா பெற்றுக் கொண்டார்.

Next Story