தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 10 வீடுகள் சேதம்: தூத்துக்குடியில் 2-வது நாளாக கனமழை 169 மில்லி மீட்டர் பதிவானது
தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்தது. இங்கு மொத்தம் 169 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இந்த மழைக்கு மாவட்டம் முழுவதும் 10 வீடுகள் சேதம் அடைந்தன.
தூத்துக்குடி,
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால் தூத்துக்குடி திக்கு முக்காடியது. நகரின் பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பிறகு மழை பெய்வது நின்றது.
இதையடுத்து மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மாநகர பகுதிகளில் சுமார் 40 மோட்டார்கள் மூலம் மழைநீர் உறிஞ்சப்படுகிறது. அதேபோல் டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்து துண்டிப்பு
நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. 11 மணி முதல் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு லேசான வெயில் அடித்தது. மழை காரணமாக, ஏற்கனவே மழைநீர் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் முடிவடையாத நிலையில் அந்த சாலை முழுவதும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சுமார் ஒரு அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரை கடந்தே நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள் அனைவரும் வார்டுகளுக்கு செல்கின்றனர். சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
10 வீடுகள் சேதம்
இதேபோல் வெற்றிவேல்நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. செயிண்ட் பீட்டர் ஆலய தெருவிலும் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. வடகிழக்கு பருவமழையால் இதுவரை 33 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 169 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
திருச்செந்தூர்-14, காயல்பட்டினம்-52.2, குலசேகரன்பட்டினம்-35, விளாத்திகுளம்-23, காடல்குடி-13, வைப்பார்-47, சூரங்குடி-20, கோவில்பட்டி-73, கழுகுமலை-28, கயத்தாறு-49, கடம்பூர்-73, ஓட்டப்பிடாரம்-36, மணியாச்சி-34, வேடநத்தம்-15, கீழஅரசடி-11.5, எட்டயபுரம்-59, சாத்தான்குளம்-66.8, ஸ்ரீவைகுண்டம் 49.5.
Related Tags :
Next Story