மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டையில், அதிக வட்டி தருவதாக கூறி 25 பவுன் நகை, ரூ.60 லட்சம் மோசடி - பெண் மீது துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் + "||" + In Ranipet, claiming to give high interest 25 pound jewelery, Rs 60 lakh fraud

ராணிப்பேட்டையில், அதிக வட்டி தருவதாக கூறி 25 பவுன் நகை, ரூ.60 லட்சம் மோசடி - பெண் மீது துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

ராணிப்பேட்டையில், அதிக வட்டி தருவதாக கூறி 25 பவுன் நகை, ரூ.60 லட்சம் மோசடி - பெண் மீது துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
ராணிப்பேட்டையில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் 25 பவுன் நகை மற்றும் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக பெண் மீது ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பள்ளேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராணிப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ராணிப்பேட்டையில் உள்ள பெண்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு (ஜிம்) செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்தநிலையில் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தான் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பி பல பெண்கள் தங்களிடமிருந்த பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளனர். மேலும் தங்களுக்கு தெரிந்த பெண்களையும் அவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பல பெண்களிடமிருந்து 25 பவுன் நகை மற்றும் ரூ.60 லட்சம் வரை பணம்பெற்ற அவர் சில நாட்கள் வட்டியை சரியாக கொடுத்து வந்துள்ளார். பின்னர் சரியாக வட்டி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்த பெண்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது அவர் சரியாக பதில் சொல்லாமல் இருந்துள்ளார். மேலும் பணம் கொடுத்தவர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிப்படைந்த பெண்கள் 4 பேர் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணியிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை