சிதம்பரத்தில் தூர்வாரப்பட்ட குளங்களை கலெக்டர் ஆய்வு


சிதம்பரத்தில் தூர்வாரப்பட்ட குளங்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2020 4:00 PM GMT (Updated: 19 Nov 2020 3:53 PM GMT)

சிதம்பரத்தில் தூர்வாரப்பட்ட குளங்களை கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாமலைநகர்,

சிதம்பரம் நகரில் தீர்த்த குளங்களான ஓமக்குளம், நாகச்சேரி குளம், ஞானப்பிரகாசம் குளம் ஆகியவை உள்ளன. இந்த குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் குளங்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும் குளத்தை சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது பெய்து வரும் மழையால் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் ஓமக்குளத்தை நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஓமக்குளம் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நாகச்சேரி குளம், ஞானப்பிரகாசம் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஞானப்பிரகாசம் குளத்தை சுற்றிலும் இருந்த செடி, கொடிகளை அகற்றுமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சிதம்பரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் கந்தவேல், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், சர்வேயர் பரந்தாமன், நீர் நிலை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், செயலாளர் சித்து கனகசபை, வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக சிதம்பரம் அருகே உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரியின் கிசான் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை கலெக்டர் சந்திரசேகர சகாமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story