தொடர் மழை எதிரொலி: 55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதையடுத்து இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இந்த அணையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைதிறப்பு தாமதமாகி வந்தது.
இந்நிலையில் இந்த மாதம் தொடக்கம் முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 16-ந்தேதி 53 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதனிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரைதான் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சிவஞானபுரம், குன்னுவாரங்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 126 கன அடியாக உள்ளது. இந்த உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story