கல்யாணில் ரெயில்வே மேம்பால ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது


கல்யாணில் ரெயில்வே மேம்பால ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது
x
தினத்தந்தி 23 Nov 2020 8:55 PM GMT (Updated: 23 Nov 2020 8:55 PM GMT)

கல்யாணில் ரெயில்வே மேம்பாலத்திற்காக 76.67 மீட்டர் நீள ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது.

மும்பை, 

தானே மாவட்டம் கல்யாணில் தாக்குர்லி- கல்யாண் ரெயில் நிலையம் இடையே இருந்த ஆங்கிலேயர் கால பழமையான பட்ரிபுல் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2018-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அபாயகரமான நிலையில் இருந்ததால் அந்த பாலம் அகற்றப்பட்டது. இதையடுத்து அங்கு புதிய ரெயில்வே மேம்பாலத்தை கட்ட மத்திய ரெயில்வே முடிவு செய்தது.

இதில், கடந்த சனிக்கிழமை முதல் பாலம் கட்டும் பணிக்காக ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி நடந்து வந்தது. இரும்பு சட்டம் பொருத்தும் பணியை மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே சனிக்கிழமை பார்வையிட்டார்.

பணி முடிந்தது

இந்தநிலையில் நேற்று அதிகாலை தான் பட்ரிபுல் ரெயில்வே மேம்பாலத்திற்கு ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாலம் கட்டும் பணிக்காக மொத்தம் 76.67 மீட்டர் நீளம் மற்றும் 12.3 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத இரும்பு சட்டம் பொருத்தப்பட்டது. இதில் சனிக்கிழமை 41 மீட்டர் நீளத்திற்கு இரும்பு சட்டம் பொருத்தப்பட்டது. மீதமுள்ள பகுதியில் இரும்பு சட்டம் பொருத்தும் பணி நேற்று அதிகாலை 2.45 மணியளவில் முடிந்தது” என்றார்.

Next Story