கஜா புயலின் போது சிக்கியது: கடலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பல் அப்புறப்படுத்த நடவடிக்கை


கஜா புயலின் போது சிக்கியது: கடலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பல் அப்புறப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2020 10:56 PM GMT (Updated: 24 Nov 2020 10:56 PM GMT)

கஜா புயலின்போது காரைக்காலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டம் மேலவாஞ்சூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் துறைமுகத்திற்கு, தூர்வாரும் பணிக்காக மும்பையில் இருந்து வீரா பிரேம் என்ற கப்பல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் காரைக்கால் வந்தது. தூர்வாரும் பணியை முடித்துக்கொண்டு கப்பல் மும்பை புறப்பட்டது.

அப்போது கஜா புயல் தாக்கியதில் அந்த கப்பல் மேலவாஞ்சூர் கடல் பகுதியில் தரைதட்டி நின்றது. கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 7 பேர், பல நாட்கள் கப்பலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். கப்பலை உடனே அப்புறப்படுத்த முடியாது என தெரிந்த பிறகு, கப்பலில் உள்ள அனைவரும் வேறு கப்பல் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கப்பலை உடைப்பதில் சிக்கல்

மும்பையில் உள்ள கப்பல் நிறுவன அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை காரைக்காலுக்கு வந்து, தரை தட்டிய கப்பலை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் முயற்சி பயன் அளிக்காத்தால், கப்பலை உடைத்து எடுக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு, மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கப்பலை உடைக்கும்போது அதில் இருக்கும் ரசாயன பொருட்கள், எண்ணெய் மற்றும் கழிவுப்பொருட்கள் கடல் நீரில் கலந்தால், கடல் மாசு அடைவதுடன், மீன்வளம் பாதிக்கும். எனவே சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்குவதில் பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கப்பல் அங்கேயே உள்ளது.

கலெக்டர் ஆய்வு

தற்போது, நிவர் புயல் உருவாகி இருப்பதால், புயலில் கப்பல் கவிழ்ந்து சேதமானால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும். எனவே கப்பலை அங்கிருந்து உடனே அப்புறப்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, நேற்று அரசு அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, கடல்வளம், கிராம மக்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் கப்பலை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

நிவர் புயலுக்கு பிறகு தரை தட்டிய கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Next Story