திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் 660 தற்காலிக தங்கும் இடங்கள் கலெக்டர் பேட்டி
நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 660 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் எளாவூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டிலும், மெதிப்பாளையம் ஊராட்சியில் ரூ.3 கோடியே 49 லட்சம் மதிப்பிட்டிலும் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பயன்கள் கொண்ட புயல் பாதுகாப்பு மையங்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா, கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரனுடன் சேர்ந்து நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் கதிர்வேல், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், கவுரி ஆகியோர் உடன் இருந்தனர்.
64 மண்டல குழுக்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் 70 கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு மொத்தம் 133 பகுதிகள் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு மையங்கள் மற்றும் 660 தற்காலிக தங்கும் இடங்களும் தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள கட்டுபாட்டு அறை 24 மணி நேர மும் செயல்படும் வகையில் 044-27664177 மற்றும் 044-27666746 எண்கள் வழங் கப்பட்டுள்ளது. இது தவிர மழை நீர் தேங்கியது தொடர்பான பாதிப்புகளை புகைப்படம் அனுப்பி தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள் 9444317862- 9384056215 வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடியாக பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழவேற்காடு
காட்டுப்பள்ளி வைரவன்குப்பம் போன்ற இடங்களில் புயல் பாதுகாப்பு மையங்கள், ஆண்டார்மடம், திருப்பாலைவனம், 26 திருமண மண்டபங்கள், 6 கல்லூரிகளின் விடுதிகளிலும் மீனவர்கள், பொதுமக்கள் தங்க வைக்க தயார் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய்ஆனந்த் தலைமையில் பழவேற்காடு ஏரி கரையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மீனவர்களை கண்காணித்தும், அவர்களது படகுகளையும் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.
பழவேற்காட்டில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பழவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், மணலி புதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story