திருமண ஆசைவார்த்தை கூறி 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


திருமண ஆசைவார்த்தை கூறி 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 27 Nov 2020 3:54 PM GMT (Updated: 27 Nov 2020 3:54 PM GMT)

திருமண ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மாதன் என்பவரது மகன் ஈஸ்வரன் (வயது 24). பழங்குடியினரான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயதான பழங்குடியின சிறுமியிடம் பழகினார்.

பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி பலாத்காரம் செய்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் சிறுமிக்கு தாலியும் கட்டினார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக கூடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

10 ஆண்டு சிறை

அதன்பேரில் போலீசார் சிறுமியை கடத்திச்சென்றது, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது, பலாத்காரத்தில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஈஸ்வரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு, சிறுமியை கடத்தி சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டுகள், திருமணம் செய்ததற்கு ஒரு ஆண்டு, பலாத்காரத்தில் ஈடபட்டதற்கு 10 ஆண்டு என்று நீதிபதி அருணாசலம் தீர்ப்பளித்தார். அத்துடன் இந்த தீர்ப்பை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிறையில் அடைப்பு

இந்த வழக்கில் அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஈஸ்வரனை போலீசார் கோவைக்கு அழைத்துச்சென்று மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது அந்த சிறுமி அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வக்கீல்கள் கூறும்போது, ஒரு வழக்கில் ஒன்றுக்கு மேல் பிரிவு இருக்கும் பட்சத்தில், அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தண்டனை வழங்கப்பட்டு, ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டால், அந்த தண்டனையில் எது அதிகமாக இருக்கிறதோ அதை அனுபவிக்க வேண்டும். அதன்படி ஈஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் அவர் 10 ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்றனர். 

Next Story