கடையம் அருகே செங்கல் சூளை அதிபர் கொலையில் மகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்
கடையம் அருகே செங்கல் சூளை அதிபர் கொலையில் மகனை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே புலவனூர் பொன்மலை நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 66). செங்கல்சூளை அதிபரான இவருக்கு வள்ளியம்மாள், சுகந்தா ஆகிய 2 மனைவிகள். முதல் மனைவிக்கு திருக்குமரன் (42), ராமகிருஷ்ணன் ஆகிய 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள். 2-வது மனைவிக்கு 2 மகன்கள் உள்ளனர். தங்கராஜ் தனது முதல் மனைவி, பிள்ளைகளை பிரிந்து 2-வது மனைவியுடன் தெற்கு கடையம் நடுத்தெருவில் வசித்து வந்தார். மேலும் அவர் தனது முதல் மனைவியின் பெயரில் 15 ஏக்கர் நிலமும், 2-வது மனைவியின் பெயரில் 25 ஏக்கர் நிலமும் எழுதி வைத்தார்.
இந்த நிலையில் தங்கராஜ் தனது நிலத்தின் வழியாக வள்ளியம்மாளின் நிலத்துக்கு செல்லக்கூடாது என்று கூறி, பாதையில் முள்வேலி அமைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருக்குமரன் நேற்று முன்தினம் தன்னுடைய தந்தை தங்கராஜை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தங்கராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடையம் அருகே மேட்டூர் ரெயில்வே கேட் பகுதியில் பதுங்கி இருந்த திருக்குமரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான திருக்குமரன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய தந்தை தங்கராஜ் 2-வது திருமணம் செய்ததில் இருந்து, எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன். மேலும் அவர் என்னுடைய தாயாருக்கு சொத்துகளை பிரித்து தந்தபோதும், எங்களுக்கு குறைவான சொத்துகளே தந்தார். இந்த நிலையில் அந்த இடத்துக்கும் நாங்கள் செல்வதற்கு பாதை தர மறுத்து தந்தை தகராறு செய்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரரான என்னுடைய தம்பி ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் இறந்தார். அப்போதும் இறுதிச்சடங்கில் தந்தை கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எங்களது நிலத்தில் இருந்து டிராக்டரில் வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்தேன். அப்போது தந்தை தங்கராஜ், பாதையில் கல் ஊன்றி மறித்து இருந்தார். அந்த கல்லை பிடுங்கி விட்டு டிராக்டரில் வந்தேன். பின்னர் தலைச்சுமையாக வைக்கோல் கட்டுகளை வீட்டுக்கு கொண்டு வந்தேன்.
இதையடுத்து மீண்டும் அந்த வழியாக செல்லாத வகையில், தந்தை முள்வேலி அமைத்தார். அதனை நான் அகற்றினேன். அப்போது தந்தை தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்தேன். பின்னர் வெளியூருக்கு செல்வதற்காக மேட்டூர் ரெயில்வே கேட் அருகில் பதுங்கி இருந்தபோது போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் திருக்குமரனை அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story