திருப்பைஞ்சீலி சந்தையில் கள்ள நோட்டை மாற்றிய வாலிபர் வியாபாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


திருப்பைஞ்சீலி சந்தையில் கள்ள நோட்டை மாற்றிய வாலிபர் வியாபாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 30 Nov 2020 12:00 AM GMT (Updated: 30 Nov 2020 12:00 AM GMT)

திருப்பைஞ்சீலி சந்தையில் கள்ள நோட்டை மாற்றிய வாலிபரை வியாபாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் மழை தூறிக் கொண்டே இருந்தது. அப்போது ஒரு வாலிபர், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் நூறு ரூபாய் நோட்டை கொடுத்து பொருட்களை வாங்கி உள்ளார். இந்நிலையில் ஒரு வியாபாரி அந்த வாலிபர் கொடுத்த நோட்டின் மீது சந்தேகம் அடைந்து அவரைப் பிடித்து விசாரித்துள்ளார். இதற்கிடையில், மற்ற வியாபாரிகளும் சந்தேகமடைந்து கூடினர். அப்போது அவர் பொருட்களை வாங்க கொடுத்த அனைத்து நோட்டுகளும் கள்ளநோட்டுகள் என்பது தெரிய வந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசாரிடம்ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அந்த வாலிபரை பிடித்து வைத்துக் கொண்டு மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாண்டியன் (வயது 32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story