கோடை விழா-மலர் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 50 ஆயிரம் பூஞ்செடிகள் நடவு


கோடை விழா-மலர் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 50 ஆயிரம் பூஞ்செடிகள் நடவு
x
தினத்தந்தி 30 Nov 2020 8:57 AM IST (Updated: 30 Nov 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

கோடைவிழா-மலர் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 50 ஆயிரம் பூஞ்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில், திரும்பும் திசையெல்லாம் பச்சை பசேலென காட்சியளிக்கும் இயற்கை எழில்மிகு காட்சிக்கு பஞ்சம் இருக்காது. சர்வதேச சுற்றுலாதலமாக திகழும் கொடைக்கானலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஆண்டுதோறும் கொடைக்கானலில் கோடைவிழா நடத்தப்படுகிறது. மேலும் நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோடைவிழா ரத்து செய்யப்பட்டது.

50 ஆயிரம் மலர் செடிகள்

இந்தநிலையில் அடுத்த ஆண்டு (2021) மே மாதம் கோடைவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பிரையண்ட் பூங்காவை மலர் கண்காட்சிக்கு தயார் செய்யும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. அதன்படி மலர் கண்காட்சிக்காக, பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது.

இதில் 6 மாதத்தில் பூக்க கூடிய சால்வியா, டெல்பின்யம், பிங்ஆஸ்டர், ஆர்னத்தி கோலம், லில்லியம் போன்ற பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. இப்பணிகள் ஒரு வாரத்திற்கு நடைபெறும் எனவும், சுமார் 50 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்படும் எனவும், இந்த பூக்கள் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் பூக்க தொடங்கும் எனவும் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.

Next Story