பொது மக்களுக்கு மரியாதை அளித்து போலீசார் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் ஐ.ஜி. ஜெயராம் பேச்சு


பொது மக்களுக்கு மரியாதை அளித்து போலீசார் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் ஐ.ஜி. ஜெயராம் பேச்சு
x
தினத்தந்தி 2 Dec 2020 1:21 AM GMT (Updated: 2 Dec 2020 1:21 AM GMT)

போலீசார் பொதுமக்களுக்கு மரியாதை அளித்து நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று காவலர் பயிற்சி நிறைவு விழாவில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.ஜெயராம் பேசினார்.

திருச்சி,

திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் தற்காலிக காவலர்களாக பயிற்சி பெற்ற 514 பேருக்கு பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி முடித்த காவலர்களின் கம்பீர அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

உடற்பயிற்சி

இன்று பயிற்சி முடித்து செல்லும் நீங்கள் பல்வேறு துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நாம் இப்போது கணினி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புது, புது சவால்கள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றை எல்லாம் நாம் திறமையாக கையாள வேண்டும். பணியில் நேர்மை ரொம்ப முக்கியமானது.

பயிற்சி முடிந்து செல்லும் காவலர்கள் தங்களது பேச்சு திறமையையும், எழுத்து திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை நீங்கள் வழக்குகளை புலனாய்வு செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அணிவகுப்பிற்கு உங்களைப் பார்க்கிறேன். யாருக்கும் தொப்பை இல்லை. இதை நீங்கள் அப்படியே பராமரிக்க வேண்டும். கிடைக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்ய மறக்கக் கூடாது.

பொதுமக்களுக்கு மரியாதை

போலீஸ் நிலையத்தில் தங்களது குறைகளை தெரிவிக்க வருபவர்களை முதலில் உட்கார வைக்கும் நல்ல பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். இது நமது கலாசாரம் பண்பாடு. பொது மக்களுக்கு மரியாதை கொடுத்து மக்கள் போலீசாக பணியாற்ற வேண்டும். ஏனென்றால் மக்கள் வரிப்பணத்தில் தான் நமக்கு சம்பளம் கிடைக்கிறது. அதனை மனதில் கொண்டு நேர்மையுடனும் விசுவாசத்தோடும் பணியாற்றி தமிழக காவல் துறைக்கு நல்ல பெயர் பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாகச நிகழ்ச்சிகள்

விழாவில் பயிற்சி முடித்த காவலர்கள் கராத்தே, ஓடு உடைத்தல், எரியும் நெருப்பு வளையத்திற்குள் புலி போல் பாய்ந்து செல்லுதல், கண்களை துணியால் கட்டிக்கொண்டே துப்பாக்கியை சுடுவதற்கு தயாராகுதல் உள்பட பல்வேறு வீர சாகசங்களை செய்து காட்டினார்கள். பல்வேறு கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள்.

முன்னதாக தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணியின் கமாண்டன்ட் ஆனந்த் வரவேற்று பேசினார். விழாவில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி முடித்த போலீசாரின் பெற்றோர், உறவினர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு வீர சாகச நிகழ்ச்சிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பயிற்சி காவலர்கள் யாருமே முக கவசம் அணிய வில்லை. சமூக இடைவெளியும் இந்த விழாவில் கேள்விக்குறியானது.

Next Story