தேர்தலில் முழுமையான வெற்றியைபெற ஒவ்வொரு பூத் அளவிலும் 45 மகளிரை நியமிக்க வேண்டும் அமைச்சர் பேச்சு


தேர்தலில் முழுமையான வெற்றியைபெற ஒவ்வொரு பூத் அளவிலும் 45 மகளிரை நியமிக்க வேண்டும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2020 4:45 AM GMT (Updated: 3 Dec 2020 4:45 AM GMT)

தேர்தலில் முழுமையான வெற்றியை பெற ஒவ்வொரு பூத் அளவிலும் 45 மகளிரை நியமிக்க வேண்டும் என்று திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்ட செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நேற்று காலை பல்லடம் அருகே 63வேலம்பாளையத்தில் உள்ள கந்தசாமி கவுண்டர் ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சருக்கு அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவிற்கு கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட ஆவின் தலைவர் வக்கீல் மனோகரன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், செல்வி முருகேசன், பொன்னுசாமி, இளைஞரணி செயலாளர் யு.எஸ்.பழனிசாமி, விவசாயப் பிரிவுச் செயலாளர் புத்தரச்சல் பாபு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொறுப்பேற்பு

அதை தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கட்சியின் மினிட் நோட்டில் கையெழுத்து போட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கட்சியினர் ஆளுயர மாலை, மலர் கிரீடம் அணிவித்து வீரவாள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

உடுமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி வருகிறது. மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து வருகிறோம். கட்சியின் தலைமை பல்வேறு பணிகளை வழங்கியிருக்கிறது. பூத் கமிட்டி அமைக்க தெரிவித்துள்ளது. இளைஞர், இளம் பெண் பாசறைகள் ஏற்படுத்தவும் கூறியுள்ளது. ஒவ்வொரு பூத் அளவிலும் 25 முதல் 45 மகளிரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் நாம் தேர்தலில் முழுமையான வெற்றியை பெற முடியும்.

அதுபோல் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக செய்ய வேண்டும். வருகிற 5-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினமான அன்று அவருடைய உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

தொண்டர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க தயாராக உள்ளேன். விரைவில் ஊராட்சி, பகுதி, வார்டு வாரியாக நிர்வாகிகளின் வீடு தேடி சென்று சந்தித்து குறை, நிறைகளை கேட்க உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தனியரசு எம்.எல்.ஏ., ஆவின் மாவட்ட துணை தலைவர் சிவகுமார், அ.தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர்பந்தல் நடராஜன், பகுதி செயலாளர் பண்ணையார் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, ஆவின் முன்னாள் துணைத் தலைவர் ஈஸ்வரன், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ரேணுகா முருகராஜ், பொன்னுலிங்கம், மகாலிங்கம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் பாண்டியன், குடிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சுகந்தி முரளி, காங்கேயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், பல்லடம் முன்னாள் நகராட்சித் துணைத் தலைவர்கள் தர்மராஜ், வைஸ் பழனிசாமி, மகளிரணி சித்ராதேவி, நிர்வாகிகள் சரளை விக்னேஷ், பழனிசாமி, திருப்பூர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், 52-வது வட்ட செயலாளர் ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் மாஷா ராஜேந்திரன், 54-வது வட்ட செயலாளர் நாகஜோதி மற்றும் சுரேந்திரன், 55-வது வட்ட செயலாளர் சிவா, 57-வது வட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாசலம் நன்றி கூறினார்.

10 லட்சம் செட்டாப்பாக்ஸ்

முன்னதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, “ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒவ்வொரு துறைகளிலும் முதன்மை பெற்று விளங்கி வருகிறது. அனைத்து கிராம மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 மாதங்களில் மட்டும் 3½ லட்சம் மகளிருக்கு கறவைப் பசு, வெள்ளாடுகள், நாட்டுக்கோழிகள் வழங்கப்பட இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. அதை எக்கு கோட்டையாக மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலமாக 10 லட்சம் செட்டாப்பாக்ஸ் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்கள் கோரப்பட்டு உள்ளது. விரைவில் தமிழகத்தில் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களுக்கு உழைப்பது அ.தி.மு.க. அரசின் பணி. அந்த உழைப்புக்கு மக்கள் எங்களுக்கு ஊதியம் தருவார்கள்” என்றார்.

Next Story