“மக்களின் வசதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க வேண்டும்” - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


மதுரை ஐகோர்ட்டு
x
மதுரை ஐகோர்ட்டு
தினத்தந்தி 3 Dec 2020 11:34 PM GMT (Updated: 3 Dec 2020 11:34 PM GMT)

“மக்களின் வசதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க வேண்டும்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கலெக்டர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி தென்காசியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு போதுமான இடம் இருந்து வருகிறது. ஆனால் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 30 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு புதிய கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை 11 ஏக்கரில் அமைய உள்ளது. மருத்துவமனை அருகே மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கப்படும் பட்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பல்வேறு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாகவும் இருக்கும். எனவே மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதே நேரத்தில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று வந்தது.

பல்வேறு இடையூறுகள்
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கலெக்டர் அலுவலகம் அமையுமானால், மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு ஏற்படும்.

மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போன்ற போராட்டங்கள் நடைபெறும்போது, மருத்துவமனை செல்லும் நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான இடங்கள் இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது“ என்று வாதாடினார்.

பின்னர் நீதிபதிகள், “மாவட்டங்கள் புதிதாக பிரிக்கும் போது உள்கட்டமைப்பு வசதிகளை கவனிப்பதில்லை. 2 அல்லது 3 தாலுகாக்கள் இருக்கக்கூடிய அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. குறைந்தது 5 எம்.எல்.ஏ.க்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட நீதிபதி இருப்பது போல பிரிக்க வேண்டும். மக்களின் வசதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.

ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆனால் முன்னாள், இன்னாள் அரசுகள் இதையே செய்கின்றன“ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை விரிவான உத்தரவுக்காக ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story