பேராவூரணியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடுகள் மீட்பு


பேராவூரணியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடுகள் மீட்பு
x
தினத்தந்தி 11 Dec 2020 9:51 AM IST (Updated: 11 Dec 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடுகள் மீட்கப்பட்டன.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாசில்தார் அலுவலக வளாகத்தில் சில பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அங்குள்ள புதர் மண்டிய பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டியில், ஒன்றின் மேல் ஒன்றாக 2 பசுமாடுகள் விழுந்தன.

குறுகலான தொட்டியாக இருந்ததால் மாடுகளால் வெளியே வர முடியவில்லை. தொட்டிக்குள் சிக்கி கொண்டு மாடுகள் போராடிக்கொண்டிருப்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறையினர், பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மாடுகள் மீட்பு

தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சுப்பையன், நீலகண்டன், சரவணமூர்த்தி, குமார் நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது 15 அடி ஆழ தொட்டியில் சிக்கித்தவித்த மாடுகளை, தொட்டியின் பக்கவாட்டுச்சுவரை சுத்தியலால் உடைத்து அகலப்படுத்தி கயிறுகளை கட்டி உயிரோடு மீட்டனர். 1½ மணி நேரம் போராடி மாடுகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story