உடுமலை அருகே கிரந்த வரிவடிவத்துடன் கூடிய 1000 ஆண்டு பழமையான தூம்பு கண்டெடுப்பு


உடுமலை அருகே கிரந்த வரிவடிவத்துடன் கூடிய 1000 ஆண்டு பழமையான தூம்பு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 17 Dec 2020 5:29 AM GMT (Updated: 17 Dec 2020 5:29 AM GMT)

உடுமலை அருகே 1000 ஆண்டுகள் பழமையான கிரந்த வரிவடிவத்துடன் கூடிய தூம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

மனித குலத்தின் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமானது தண்ணீர். அதனால்தான் வள்ளுவப் பேராசான் நீரின்றி அமையாது உலகு என்றார். மேலும் மனிதகுல நாகரிகங்கள் அனைத்துமே நீரை அடிப்படையாக வைத்து தோன்றியவை தான். இன்றுவரை கிராமப்புற மக்களின் உயிர் நாடியாக விளங்கிவரும் கால்நடை செல்வங்களும், வேளாண்மையும் இந்த நீரை சார்ந்தே இருக்கின்றன. எனவே இந்த நீரின் அளவு ஒட்டுமொத்த சமூகத்தை பாதிக்கிறது.

எனவேதான் 2ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமூகம் நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. மழைக்காலங்களில் மிகுதியாக வரும் நீரைக்குளம், குட்டை, கண்மாய், ஏரி போன்ற பல்வேறு தாழ்வான பகுதிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அவற்றை நீர் தேவைப்படும் கோடை காலங்களில் மடை, மதகு, தூம்பு, கலிங்கு, குமுளி, வாய்க்கால் போன்றவை மூலம் வேளாண்மைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சு.சதாசிவம், க.பொன்னுச்சாமி மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் உடுமலை தாலுகாவில் அமைந்துள்ள வடபூதிநத்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1000 ஆண்டுகள் பழமையான தூம்பை கிரந்த கல்வெட்டுகளுடன் கூடிய கூம்பு கண்டறிந்துள்ளனர்.

இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-

கிரந்த எழுத்து

இடைக்கால கல்வெட்டுக்களில் வீரநாராயணப்பெருவழி என அழைக்கப்படும் பெருவழியில் அமைந்துள்ள ஊர் தான் வடபூதிநத்தம். இங்கு பண்டைய ரோம வணிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏற்கனவே 1,500 வெள்ளி ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன. இங்கு உள்ள பெரிய குளத்திற்கு திருமூர்த்தி மலையில் பெய்யும் மழைநீர் வந்து சேர்கிறது. இன்றுவரை இந்த குளத்துநீர் வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகிறது.

இந்த பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொண்டபோது வலம்புரி விநாயகர் மற்றும் லட்சுமி உருவங்களுடன் கூடிய சிற்பத்தின் பின்புறத்தில் தூம்பு இருப்பதையும், இதில் வலம்புரி விநாயகர் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் 4 வரிகளில் கிரந்த எழுத்துகள் இருப்பதையும் கண்டறிந்தோம். தமிழ் கல்வெட்டுகளில் வடமொழி சொல்லை பயன்படுத்த நேர்கின்ற போது இவற்றை எழுத கிரந்த எழுத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்.

தூம்பு கல்வெட்டு

இங்குள்ள தூம்பின் மேல்பகுதியில் வலம்புரி விநாயகர் 4 கரங்களுடன் பத்மபீடத்தில் அமர்ந்த நிலையில் கீழ் இரு கைகளைத்தொடையின் மீது வைத்தபடியும், மேல் இரு கைகளில் வலது கையில் அங்குசமும், இடது கையில் மலரையும் பிடித்தபடி காணப்படுகிறார். இத்தூம்பின் உயரம் 140 செ.மீ மற்றும் அகலம் 50 செ.மீ ஆகும். இத்தூம்பின் கீழ்ப்பகுதி உடைந்துள்ளது. மிகவும் அழகான மாலைத்தொங்கல் உடன் காணப்படும் இத்தூம்பின் கீழ் பகுதியில் உள்ள கிரந்த கல்வெட்டை இந்திய வரலாற்று பேரறிஞர் சுப்பராயலு வாசித்தார். ஸ்வதிஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டு கி.பி. 1000 ஒட்டி உள்ளதாகவும் இந்த பெரிய குளத்திலிருந்து நீர் பாசனம் பெறும் வேளாண் நிலங்கள் என்றுமே ஈரப்பதம் நிறைந்து மிகவும் செழிப்பாக பயிர்கள் காணப்படுவதாகவும் குறிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இதன் வளமையை குறிப்பதற்காகத்தான் வலம்புரி விநாயகர் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டு உடைந்து உள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை.

லட்சுமி தூம்பு

70 செ.மீ உயரமும், 50 செ.மீ அகலமும் கொண்ட இத்தூம்பில் லட்சுமி பத்மாசன நிலையில் அமர்ந்தபடி வலது மற்றும் இடது கையில் மலரை பிடித்தபடி உள்ளார். மேலே இருபக்கமும் சாமரமும் காணப்படுகிறது. இரு தூம்பின் இடுதுளைகளும் 18 செ.மீ விட்ட அளவுடன் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டு மற்றும் தூம்பின் மூலம் கி.பி 10-ம் நூற்றாண்டிலேயே கொங்கு மண்டலத்தில் ஏரி, குளங்களில் தேங்கிய நீரை வாய்க்கால்கள் மூலம் வேளாண்மைக்கு பயன்படுத்தி உள்ளதை நாம் அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story