வில்லியனூர் அருகே முருகர் சிலை திருடிய 2 பேர் கைது ஏரியில் பதுக்கி வைத்து இருந்த சிலை மீட்பு
வில்லியனூர் அருகே கோவிலில் முருகர் சிலை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஏரியில் பதுக்கி வைத்திருந்த சிலை மீட்கப்பட்டது.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே அரியூரில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையோரம் முருகன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை கோவிலை பூட்டிவிட்டு அங்குள்ள திண்ணையில் ஜனார்த்தனன் படுத்து தூங்கினார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது கோவில் திறக்கப்பட்டு, அங்கிருந்த வெண்கலத்தால் ஆன முருகர் உற்சவர் சிலை திருடு போய் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சிலை மாயமானது குறித்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் திருட்டு நடந்த கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அரியூரை சேர்ந்த ராஜா (வயது 34), முருகன் (49) ஆகியோர் முருகர் சிலையை திருடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது, கோவில் திண்ணையில் படுத்து தூங்கிய ஜனார்த்தனன் இடுப்பில் சொருகி வைத்திருந்த சாவியை ராஜா நைசாக எடுத்து, கோவிலை திறந்து சிலையை திருடியுள்ளார். பின்னர் அந்த சிலையை விற்பனை செய்ய முருகனுடன் (49) சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதுவரை யாருக்கும் தெரியாமல் இருக்க சிலையை அரியூர் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரில் மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஏரிக்கு சென்று முருகர் சிலையை மீட்டனர். அப்போது சிலையின் கால் பாதம் பகுதி உடைந்து இருந்தது. சிலை திருடிய ராஜா, முருகன் இருவரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சிலையை மீட்டு, திருடர்களை கைது செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசாரை மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் பாராட்டினார்.
Related Tags :
Next Story