மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த 4 காட்டு யானைகள்; பட்டாசு வெடித்து விரட்டினர்
மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் 4 காட்டு யானைகள் புகுந்தன. அவற்றை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்.
காட்டு யானைகள்
கோவை வனக் கோட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் சில நேரங்களில் மனித -வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் மூலையூர் சரகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 4 காட்டுயானைகள் வெளியேறின. அவை, பவானி ஆற்றை கடந்து பகத்தூர் பள்ளம் வழியாக மோத்தேபாளையம் கிராமத்தில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை தின்று நாசம் செய்தன.
பொதுமக்கள் பீதி
பின்னர் அதிகாலையில் மோத்தேபாளையம் கிராமம் வழியாக வனப் பகுதியை நோக்கி சென்றன. அப்போது வழிதவறிய யானைகள் மீண்டும் மோத்தேபாளையம் கிராமத்துக்குள் புகுந்து மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டை கடந்தது.
பின்னர் அவை, அங்குள்ள தனியார் நிறுவனத்துக்கு பின்புறம் உள்ள சீமை கருவேல புதர் பகுதிக்குள் சென்று மறைந்தன. மோத்தேபாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
பட்டாசு வெடித்தனர்
இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆலோசனையின் பேரில் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், சிறுமுகை பழனி ராஜா ஆகியோர் மேற்பார்வையில் வனவர்கள் நபீந்தன், சுரேஷ், கணேசன், வனக் காப்பாளர்கள் ஹரிஷ்பாபு, சித்தன் பாபு, தங்கராசு, முனுசாமி, அரவிந்தன் மற்றும் வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் சேர்ந்து மாலை நேரத்தில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கான வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதில் குழுவினர், புதருக்குள் மறைந்து இருந்த யானைகளை வெளியேற்ற பட்டாசுகளை வெடித்தனர். மற்றொரு குழுவினர் யானைகளை விரட்டும் பணி நடைபெறுவதால் யாரும் குறுக்கே வந்து விடக் கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
வனத்துக்குள் விரட்டும் பணி
மற்றொரு குழுவினர் யானை செல்லும் வழித்தடத்தில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணி வரை தொடர்ந்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
பகல் நேரத்தில் யானைகளை விரட்டினால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மாலை நேரத்தில் காட்டு யானைகளை வனப்பகுதியை நோக்கி விரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story