குளச்சலில் கடலில் மூழ்கிய சட்டக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு


குளச்சலில் கடலில் மூழ்கிய சட்டக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 9:42 AM IST (Updated: 28 Dec 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது விசைப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்த சட்டக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

குளச்சல்,

குருந்தன்கோடு அருகே முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் ஜெரின் ஜோஸ் (வயது 27). இவர், நெல்லை சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த பினு.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட ஜெரின் ஜோசை, பினு குளச்சலுக்கு அழைத்துள்ளார். அதன்படி கடந்த 25-ந்தேதி ஜெரின் ஜோஸ் குளச்சல் சென்றார். பின்னர், பினுவின் அண்ணன் பிண்டோ(32) உள்பட 40 பேர் சேர்ந்து ஒரு விசைப்படகில் தேங்காப்பட்டணம், இனயம் சென்றுவிட்டு முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கடலில் தவறி விழுந்தார்

அப்போது, மணவாளக்குறிச்சி சின்னவிளை கடல் பகுதியில் படகு சென்றபோது, திடீரென ஜெரின் ஜோஸ் நிலைதடுமாறி கடலில் விழுந்தார். அவர் கடலில் மூழ்கி மாயமானார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உடன் சென்றவர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர போலீசார் ஜெரின் ஜோசை மீனவர்கள் உதவியுடன் கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

நேற்று காலையில் அதே பகுதியில் மாணவனின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. மீனவர்கள் வள்ளத்தில் சென்று மாணவர் ஜெரின்ஜோசின் உடலை மீட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்தனர்.

பின்னர், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், அவரது உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சென்ற சட்டக்கல்லூரி மாணவர் கடலில் தவறி விழுந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story