68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு டி.என்.டி.சாதி சான்றிதழ் கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை


68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு டி.என்.டி.சாதி சான்றிதழ் கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 29 Dec 2020 6:54 AM IST (Updated: 29 Dec 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு ஒரே டி.என்.டி.சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

திருச்சி,

கூத்தப்பார் கள்ளர், முத்தரையர், அம்பலத்தார் பேரவை உள்ளிட்ட 68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு 1979-ம் ஆண்டு வரை குறிக்கப்பட்ட பழங்குடியினர் (டி.என்.டி) என்றே சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், 1979-ம் ஆண்டு முதல் பிழையான ஒரு ஆணை மூலம் குறிக்கப்பட்ட சமூகம் (டி.என்.சி.) என மாற்றப்பட்டு பழங்குடி மாணவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா கல்வி உள்ளிட்ட பல சலுகைகள் பறிக்கப்பட்டு விட்டதாக சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

அதேவேளையில் தமிழக அரசு சீர்மரபினர் மக்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.டி.யை டி.என்.சி.யாக மாற்றி 8.3.2019 அன்று ஒரு அரசாணை மூலம் திரும்ப பெற்று விட்டது. ஆனாலும், தமிழகத்தில் தொடர்ந்து டி.என்.சி. என்று சாதிச்சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதே வேளையில் மத்திய அரசின் உரிமைகளை பெற டி.என்.டி. என்றும் அழைக்கப்படுவர் என இரட்டை சான்றிதழ் முறையை ஏற்படுத்தி விட்டது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

அதேவேளையில் தவறை சீரமரபினர் நலச்சங்கம் சுட்டிக்காட்டியதன் பேரில் முழுமையாக டி.என்.டி. சாதி ச்சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்தநிலையில் டி.என்.டி. சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 68 சமூக சீர்மரபினர் ஒருங்கிணைந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் அய்யாக்கண்ணு, காசிமாயத்தேவர் மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.பாலமுருகன், இளைஞர் அணி தலைவர் ஆர்.வி.பரதன் மற்றும் துணைத்தலைவர் ராம்பிரபு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி சிறிது நேரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் இரு இரும்பு கதவுகளும் மூடப்பட்டன.

தேர்தல் புறக்கணிப்பு

பின்னர், முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் சிவராசுவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 8.3.2019 அன்றைய அரசு ஆணைப்படி, 68 சமூக சீர்மரபினருக்கும் டி.என்.டி. என்ற ஒரே சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு டி.என்.டி. சமூக பொருளாதாரக்கணக்கெடுப்பு நடத்திட தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் 29 பட்டப்பெயரில் வாழும் முத்தரையர் சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தனிநல வாரியம் அமைத்திட வேண்டும் என்றும், அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் 2 கோடி டி.என்.டி. மக்களும் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவதுடன் மேலும் போராட்டம் தீவிரம் அடையும் என கூறப்பட்டிருந்தது.

கலெக்டர்

இந்தநிலையில், மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு பிற்பகல் 1.30 மணிக்கு காரில் அங்கு வந்தார். அவர் வந்ததும், மூடிய கதவு திறக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'உங்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. திருச்சிக்கு அரசு பயணமாக அல்லாமல், அரசியல் பயணமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். நீங்கள், அ.தி.மு.க. அமைச்சர்களையோ அல்லது முக்கிய பிரதிநிதிகள் மூலமாக முதல்-அமைச்சரை சந்திக்க நேரம்கேட்டு நேரடியாக முறையிடுங்கள்'என்றார்.

கிராமப்புற செவிலியர்கள்

கிராமப்புற செவிலியர்கள் ஏ.ஐ.டி.யு.சி. ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சுமதி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், 'கிராமப்புற செவிலியர்களுக்கு கொரோனா காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியத்தொகை உப்பிலியபுரம், எரகுடி, மேட்டூர் மற்றும் செங்கல்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 78 பேருக்கு வழங்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக வழங்க வேண்டும். மேலும் மாத ஊக்கத்தொகை மற்றும் சம்பள நிலுவையை மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் வழங்கிட வேண்டும். பணிநிரந்தரம் செய்து மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

பறையடித்து வந்தகிராம மக்கள்

இதேபோல, வேங்கூர் பஞ்சாயத்து பகுதி மக்கள் பறையடித்தபடி மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், வேங்கூர் பஞ்சாயத்தில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் மாதம் 4 நாட்கள்தான் வேலை தருகிறார்கள். மீதி நாட்களில் அங்குள்ள பஞ்சாயத்து துணைத்தலைவர் வீட்டு வேலைக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால், சம்பளம் 4 நாட்களுக்கு மட்டுமே தருகிறார்கள். எனவே, முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன் காலி மனையில் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Next Story