பெரம்பலூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: தனி அலுவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 மாதம் சிறை கோர்ட்டு தீர்ப்பு


பெரம்பலூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: தனி அலுவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 மாதம் சிறை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Dec 2020 4:52 AM IST (Updated: 30 Dec 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தனி அலுவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தனிஅலுவலராக பணிபுரிந்தவர் கே.ராஜகோபால். இவர் எள் கொள்முதல், காலிச்சாக்குகள் விற்பனை, பொன்னி அரிசி விற்பனை செய்ததில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 678 முறைகேடு செய்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக முன்பணம் வழங்கியது போன்ற முறைகேடு செய்ததாகவும், சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாகவும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சங்கத்தின் அப்போதைய தனி அலுவலர் ராஜகோபால், காசாளர் பாண்டுரங்கன், சங்க பணியாளர் கலியமூர்த்தி ஆகியோர் மீது கூட்டுறவு துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, வணிக குற்றப்புலனாய்வு போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறை தண்டனை- அபராதம்

இதற்கான வழக்கு விசாரணை பெரம்பலூரில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதில், ராஜகோபால் உள்பட 3 பேருக்கும் தலா 10 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.70 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story