கரூர் அருகே கீழே தள்ளிவிட்டு தொழிலாளி கொலை தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு


கரூர் அருகே கீழே தள்ளிவிட்டு தொழிலாளி கொலை தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Dec 2020 1:19 AM GMT (Updated: 31 Dec 2020 1:19 AM GMT)

கரூர் அருகே கீழே தள்ளி விட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் அருகே உள்ள நெரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த அசோகன் (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கருப்பண்ணன் தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோகனும், அவரது மனைவி செல்வியும் அதனை தடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், கருப்பண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அசோக்கும், செல்வியும் சேர்ந்து கருப்பண்ணனை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கருப்பண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கருப்பண்ணன் பரிதாபமாக இறந்தார்.

தம்பதிக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையிலான போலீசார் கருப்பண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய அசோகன்- செல்வி தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர். கரூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story