தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் மறியல் செய்ய முயற்சி


தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் மறியல் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 5 Jan 2021 9:09 AM IST (Updated: 5 Jan 2021 9:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாலாஜி நகரில் ஏற்கனவே ஒரு அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த மதுக்கடையின் அருகே, பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் எதிரே புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கடையினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இந்த கடையை மூட வேண்டும் என்று நேற்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

போலீசார் சமரசம்

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் சாலையிலேயே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story