திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் விவசாயிகள் கவலை


திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 10 Jan 2021 9:38 AM IST (Updated: 10 Jan 2021 9:38 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தமிழர்களின் முக்கிய பண்டிகையான ெபாங்கல் பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது கரும்புகள். பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானையில் மஞ்சள், இஞ்சி கொத்து கட்டி, புத்தரிசி இட்டு, பொங்கல் வைத்து, கரும்பு, வாழைப்பழம், படையலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கரும்பு விற்பனை மந்த நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். கரும்பு விற்பனை மந்தத்தால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.

ரூ.150-க்கு விற்பனை

தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் திருக்காட்டுப்பள்ளி பகுதிக்கு கரும்பு கொள்முதல் செய்ய பெருமளவில் வரவில்லை. திருக்காட்டுப்பள்ளி தொகுதியில் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு அதிகபட்சமாக ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக கொள்முதல் செய்யும் போது இன்னும் குறைவான விலைக்கே கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

கசப்பான பொங்கல்

சொந்தமாக கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் குறைந்த லாபத்தை வைத்து விலைக்கு கொடுத்து விடலாம் என கருதுகிறார்கள். குத்தகை விவசாயிகள் குறைந்த விலைக்கு கரும்பை கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மட்டும் 400 ஏக்கருக்கு மேல் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. தமிழக அரசு பொங்கல் பரிசுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள் போக எஞ்சியுள்ள கரும்புகள் இன்று(ஞாயிறுக்கிழமை) அல்லது நாளைக்குள்(திங்கட்கிழமை) விற்பனை செய்யப்பட்டால் தான் பலன் இருக்கும். விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு கசப்பான பொங்கலாக அமையும் என விவசாயிகள் கூறுகிறார்கள்.

மஞ்சள் சாகுபடி

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் திருக்காட்டுப்பள்ளி, நடுப்படுகை, வளப்பக்குடி, உள்ளிட்ட கிராமங்களில் மஞ்சள் கொத்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரிக் கரையோரத்தில் வளமான மண்ணில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் கொத்து நல்ல நிலையில் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. வானிலை மாற்றமடைந்து வெயில் அடித்தால் மட்டுமே மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள் அறுவடை செய்யப்பட்டு நல்ல விலைக்கு விற்க முடியும் என விவசாயிகள் கூறினர்.

Next Story