அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கவர்னருக்கு எதிராக வேகத்தை காட்டினால் தடுத்து நிறுத்த முடியாது: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி


தர்ணா போராட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசிய போது எடுத்த படம்
x
தர்ணா போராட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசிய போது எடுத்த படம்
தினத்தந்தி 11 Jan 2021 2:26 AM GMT (Updated: 11 Jan 2021 2:26 AM GMT)

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வேகத்தை காட்டினால் தடுத்து நிறுத்த முடியாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டம்

கவர்னருக்கு எதிராக 3-வது நாளாக நேற்று நடந்த தர்ணா போராட்டத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் 4½ ஆண்டு காலமாக மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடாது. மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடாது. வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடாது. புதுவைக்கு மத்தியில் இருந்து நிதியை பெறக்கூடாது எனத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வேலைகளை செய்து வருகிறார்.

கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு 37 கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் மாளிகைக்கு எதிரே 6 நாட்கள் போராட்டம் நடத்தினோம்.

பின்னர் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கிரண்பெடி உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் அவர் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. மீண்டும் கிரண்பெடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக இருந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

அதிகார து‌‌ஷ்பிரயோகம்
புதுவையில் உள்ள எதிர்க்கட்சியினர் எதிர்க்கட்சியாகவே செயல்பட வில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நாங்கள் புதுவை மாநில மக்களின் உரிமைக்காக போராடி வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தாரா? மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பாக கிரண்பெடியை கண்டித்தாரா?

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் 1000 பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக கோப்புகள் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதில் பல்வேறு கேள்விகளை எழுப்பி திருப்பி அனுப்புகிறார். காலியாக உள்ள 5 ஆயிரம் இடங்களை நிரப்ப கோப்புகள் அனுப்பப்பட்டன. இதனை கவர்னரும், அரசு அதிகாரிகளும் காலம் தாழ்த்தி வருகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை தடுத்து அதிகார து‌‌ஷ்பிரயோகம் செய்து வருகிறார். கவர்னரின் தொல்லையை மீறி 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் சிறிய மாநிலங்களில் வளர்ச்சி பெற்ற மாநிலம், சட்டம்-ஒழுங்கு, கல்வி, மருத்துவம், விவசாயம், சுகாதாரம் என 
பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம். பதவி எங்களுக்கு முக்கியமில்லை. ஜனநாயகம், மக்கள் உரிமை, புதுச்சேரியின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும். கவர்னர் முட்டுக்கட்டையாக இல்லாமல் இருந்தால் புதுவை மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும்.

புதுவை-தமிழகம் இணைப்பு?
கிரண்பெடி அராஜகம் ஒழிய வேண்டும் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கவர்னர் கிரண்பெடி தான். 

3 நாட்கள் எங்களுடன் இணைந்து புதுவை மக்களின் உரிமையை காப்பாற்ற கைக்கோர்த்து ஊக்கத்தோடும், ஆக்கத்தோடும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவை மாநிலம் தனியாக இருக்குமா? புதுவை சட்டமன்றம் இருக்குமா? புதுவை தமிழகத்துடன் இணைக்கப்படுமா? என பொதுமக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. இதனை நாங்கள் காரணமில்லாமல் சொல்லவில்லை. மோடி அரசு படிப்படியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பறித்து வருகிறது. மின்சார வினியோகம் மாநில அரசின் அதிகாரத்தில் உள்ளது. இதனை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதை பற்றி அவர் 
கவலைப்படவில்லை.

உயிரை விடவும் தயார்
கவர்னர் கிரண்பெடி எந்தெந்த கோப்புகளை அமைச்சரவை முடிவுக்கு எதிராக திருப்பி அனுப்புகிறாரோ அதற்கு மோடி அரசு சாதகமாக உள்ளது. தமிழ்மொழி கல்விக்கு எதிராக புதிய கல்விக்கொள்கையும், நீட் தேர்வையும் திணிக்கிறார்கள். புதுவை மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க கருவியாக கிரண்பெடியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. புதுவை அரசின் உரிமையை படிப் படியாக பறித்து வருகிறது. எங்களுக்கு ஆட்சியை பற்றி எந்த கவலையும் கிடையாது. நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், இல்லை என்பது முக்கியமில்லை. மாநில மக்களின் சுதந்திரத்தை, உரிமையை யார் பறிக்க நினைத்தாலும் நாங்கள் மக்களுக்காக உயிரை விடவும் தயாராக இருக்கிறோம்.

கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வேகத்தை காட்டினால் தடுத்து நிறுத்த முடியாது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த தர்ணா போராட்டம் தற்போது நிறைவடைகிறது.

முழுஅடைப்பு
கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட போராட்டமாக வருகிற 22-ந் தேதி கவர்னர் கிரண்பெடி திரும்பிப்போ என வலியுறுத்தி கையெழுத்து இயக்க போராட்டமும், 29-ந் தேதி தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டமும், அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி உண்ணாவிரதமும், 15 முதல் 20-ந் தேதிக்குள் ஏதாவது ஒருநாள் முழு ஊரடங்கு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story