சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள், பெற்றோர் தர்ணா


ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயிலை மாணவர்கள், பெற்றோர் முற்றுகையிட்டபோது எடுத்த படம்
x
ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயிலை மாணவர்கள், பெற்றோர் முற்றுகையிட்டபோது எடுத்த படம்
தினத்தந்தி 11 Jan 2021 3:27 AM GMT (Updated: 11 Jan 2021 3:27 AM GMT)

சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி முன்பு மாணவர்கள், பெற்றோர்தர்ணா போராட்டம் நடத்தினர்.

சிறப்பு கலந்தாய்வு
இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி முதல் கட்ட கலந்தாய்வு, 2-வது கட்ட கலந்தாய்வு மற்றும் மாப்-ஆப் கலந்தாய்வு நடத்தி மருத்துவ இடங்களை நிரப்ப வேண்டும். இதில் காலியாக உள்ள இடங்களை ‘ஸ்ட்ரே வேகன்சி ரவுண்ட் அப்’ என்ற பெயரில் சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும். இந்த சிறப்பு கலந்தாய்வு கடந்த 29-ந் தேதி நடத்தப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு அவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் கலையரங்கின் முன்பு குவிந்தனர்.

திடீர் ரத்து
அப்போது ஜிப்மர் நிர்வாகம் தரவரிசை பட்டியலில் இல்லாத பலர் கலந்தாய்வில் பங்கேற்க வந்திருப்பதாக கூறி திடீரென கலந்தாய்வை ரத்து செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவர்கள் ஜிப்மர் நிர்வாகத்திடம் கலந்தாய்வை ரத்து செய்வதற்கான காரணம் குறித்து கேட்டனர்.

அப்போது நிர்வாக தரப்பில், தரவரிசை பட்டியலில் இல்லாத பலர் இங்கு வந்துள்ளனர் என்று கூறியது. இதற்கு, பெற்றோர் தரப்பில், அந்த பட்டியலில் உள்ளவர்கள் பலர் மற்ற கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். எனவே பட்டியலில் அடுத்து உள்ள மாணவர்களை வைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றனர். அதற்கு ஜிப்மர் நிர்வாகம் மறுத்து விட்டது.

முற்றுகை போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், பெற்றோர்சிறப்பு கலந்தாய்வை உடனே நடத்தக்கோரி ஜிப்மர் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் நுழைவாயில் மூடப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை.

15-ந் தேதி கலந்தாய்வு
இதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘வருகிற 13-ந் தேதி வரை ஜிப்மர் இணைய தளத்தில் சிறப்பு கலந்தாய்வுக்கு பதிவு செய்யுங்கள். அதன் பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 15-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்’ என்று உறுதியளித்தார். இதன் பின் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story