மின்துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம்: அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை; புதுச்சேரி மின்துறை எச்சரிக்கை


மின்துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம்: அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை; புதுச்சேரி மின்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2021 3:36 AM GMT (Updated: 11 Jan 2021 3:36 AM GMT)

அரசின் விதிகளை மீறி போராட்டம் நடத்தினால் நன்னடத்தை விதிகளின்படி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலவரையற்ற போராட்டம்
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முதல் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையின் செயலினை அதிக திறம்பட செயல்படுத்த மத்திய அரசானது தனியார் மயமாக்குதல் என்ற கொள்கை முடிவினை எடுத்துள்ளது. அதற்காக யூனியன் பிரதேசங்களில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு புதுச்சேரி மின்துறையில் பொறியாளர்கள், தொழிலாளர்களை உள்ளடக்கிய தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று முதல் தொடங்க உள்ளது. மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மின்தடை, சேவை தடைபடும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.

ஒப்பந்த அடிப்படையில்...
மின்துறையானது பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறையாகும். பொதுசேவை புரியும் துறையை சார்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பது விதியாகும். வேலைநிறுத்த போராட்டத்தை எதிர்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மின்துறை மேற்கொண்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் ஓய்வுபெற்ற உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய முடிவு செய்துள்ளது.

பயிற்சி முடித்த ஐ.டி.ஐ. தொழில்நுட்ப சான்றிதழ் பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் ஒப்பந்ததாரர் கொண்டு மின்பராமரிப்பு மற்றும் மின்தடை பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்னடத்தை விதிப்படி நடவடிக்கை
போராட்டம் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆகவே போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தில் பங்கு கொள்ளும் ஊழியர்கள் மீது நன்னடத்தை விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்ட காலமானது கண்டிப்பாக பிரேக்கிங் சர்வீஸ் ஆக கருதப்படும். இதற்கு சம்பளம் வழங்கப்படாது. மேலும் காவல்துறையும் அனைத்து மின்துறை அலுவலகங்களிலும் போதுமான பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story