தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி


தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2021 2:08 AM GMT (Updated: 12 Jan 2021 2:08 AM GMT)

தமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தமிழ்நாடு பா.ஜனதா மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவி நேற்று மாலை தரிசனம் செய்தார். அவருடன் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:-

பா.ஜனதா வலிமை

தமிழ்நாட்டு மக்கள் பாரதீய ஜனதாவிற்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழ்நாட்டில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது பாரதீய ஜனதா வலிமையாக உள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

அ.தி.மு.க.வே தீர்மானிக்கும்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பெரும்பான்மையான கட்சியாக உள்ளது. எனவே, சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும். அவர்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இருக்கும். ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்

முன்னதாக பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக மாநில தேர்தல் பார்வையாளருமான சி.டி.ரவி, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கருடாழ்வார் சன்னதி, மூலவர் ரெங்கநாதர், தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் ரெங்கா, ரெங்கா கோபுரம் வழியாக புறப்பட்டுச் சென்றனர்.

Next Story