விக்கிரமசிங்கபுரம் அருகே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; நெல்லை கலெக்டரிடம், கிராம மக்கள் மனு


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது
x
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது
தினத்தந்தி 12 Jan 2021 5:02 AM GMT (Updated: 12 Jan 2021 5:02 AM GMT)

விக்கிரமசிங்கபுரம் அருகே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குவார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர். நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கிராம மக்கள் மனு
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள புலவன்பட்டி கிராம மக்கள் முன்னாள் ஊர் நல கமிட்டி காரியதரிசி தவமணி சாமுவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் அன்பு தேவமணி ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், புலவன்பட்டி வாய்க்காலில் 3 ஊர்களை இணைக்கும் பாலம் உள்ளது. அதாவது புலவன்பட்டி, வெயில்முத்தன்பட்டி, அம்பலவாணபுரம் ஆகிய மூன்று ஊர்களுக்கு பிரதான பாலம் இந்த பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாகத்தான் வயலுக்கு நெல் அறுவடை செய்யக்கூடிய அறுவடை எந்திரம் சென்றுவர வேண்டும். இந்த பாலம் பழுதடைந்ததால் அதை சீரமைக்கும் பணி தொடங்கி 8 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இந்த பாலத்தின் அருகில் ஒரு தொங்கு பாலம் போல் மக்கள் நடந்து செல்வதற்கு பாலம் அமைத்து உள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் வாய்க்காலில் விழுந்து காயமடைந்து உள்ளனர். எனவே இந்த பாலத்தை விரைவாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

நடவடிக்கை
திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜெபசிங் என்பவர் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், திசையன்விளை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படக்கூடிய தொழிற்சாலை மற்றும் பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், சங்கரன்கோவில் ரோடு பகுதியில் விவசாய நிலத்தின் அருகில் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் கழிவுநீர் அருகில் உள்ள ஓடையில் செல்வதால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த தொழிற்சாலைக்கு செல்லுகின்ற பாதை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Next Story