வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு


வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Jan 2021 5:57 AM GMT (Updated: 12 Jan 2021 5:57 AM GMT)

வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டார்.

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் வெலிங்டன் ஏரி உள்ளது. 29.2 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 27 அடியில் நீர்மட்டம் உள்ளது. இந்த நிலையில் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர்திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டு இருந்தார்.

130 கனஅடி நீர் திறப்பு

அதன்படி, நேற்று ஏரியில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு, ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

இன்று முதல்(அதாவது நேற்று) 110 நாட்களுக்கு வினாடிக்கு 130 கனஅடி வீதத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.

ஏரி கரை சீரமைக்கப்படும்

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் ஏரி மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் கொள்ளளவை அதிகரிக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளேன். எனவே மிக விரைவில் ஏரியின் கரையை சீரமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூலை ஈட்டி வருவாய் பெற்றிட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர், செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர்கள் சோழராஜன், பாஸ்கர், திட்டக்குடி தாசில்தார் சையத்அபுதாஹீர், பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ், விவசாயிகள் வேணுகோபால், மருதாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story