ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.85 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்


ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.85 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2021 4:29 PM GMT (Updated: 12 Jan 2021 4:29 PM GMT)

ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.85 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

கூடலூர்,

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி குங்கூர்மூலாவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் சத்துணவு மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதை ஏற்று 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 9 மணிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜமால் முஹம்மது, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் அனந்தசயனம், துணைத்தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், துணைத்தலைவர் ரெஜிமேத்யூ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் கூறும்போது, ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 12 ஏக்கர் நிலம் இருந்தது. அங்கு நாளடைவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. தற்போது 5½ ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி கட்டிடங்களை சுற்றிலும் சுமார் 500 மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்ட பணி தொடங்கி உள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.

Next Story