நாளை பொங்கல் பண்டிகை: அரியலூரில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்


நாளை பொங்கல் பண்டிகை: அரியலூரில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Jan 2021 10:20 AM GMT (Updated: 13 Jan 2021 10:20 AM GMT)

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரியலூரில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச்சென்றனர்.

அரியலூர்,

அரியலூரில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை(வியாழக்கிழமை) தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கரும்பு, மஞ்சள், வாழைப்பழம், பானைகள் மற்றும் வளையல், மாடுகளுக்கு கட்டப்படும் கயிறுகள் விற்கப்படும் கடைகளில், மழையின் காரணமாக மக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.

நேற்று அதிகாலை முதல் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் மட்டுேம உள்ள நிலையில், நேற்று மழை கொட்டியபோதும் அரியலூரை சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் குடையை பிடித்தபடி வந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றவாறு இருந்தனர்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தொடர் மழை பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. மழையில் நனைந்தபடி பொருட்களை வாங்குவதிலேயே கவனம் செலுத்தினர்.

பானை வியாபாரிகள் மழையில் புதுப்பானைகளை வைத்து வியாபாரம் செய்தனர். பானை தரமாக உள்ளதா? என்று தட்டிப் பார்த்து பெண்கள் வாங்குவது வழக்கம். ஆனால் மழையால் பானையை சோதித்து பார்த்து வாங்குவதில் சிரமப்பட்டனர். கரும்பு, மஞ்சள்குலை, பழங்கள் விற்கும் வியாபாரிகள் மழையில் நனைந்தபடி வியாபாரம் செய்தனர்.

தினசரி சந்தையில் காய்கள் மற்றும் பழங்கள் வாங்குவதற்கு அதிக அளவில் மக்கள் கூடியிருந்தனர். வாரச்சந்தை தொடர் மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்பட்டது. ஆடு வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சரியாக வியாபாரம் நடைபெறவில்லை. தீபாவளிக்கும் ஓரளவுதான் வியாபாரம் நடந்தது. தற்போது நெல், பருத்தி, சோளம் போன்ற பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வியாபாரிகள் நல்ல விலைக்கு விற்று பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவார்கள். அனைத்து வணிகமும் நல்ல முறையில் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த மழை விவசாயிகளையும், வியாபாரிகளையும் பாதித்துவிட்டது என்று வியாபாரிகள் நகர சங்க தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளில் இது போன்று தை மாதத்தில் தொடர்ந்து மழை பெய்தது இல்லை. இதுதான் முதல்முறை. ஒருவகையில் பருவமழை பொய்த்து விவசாயத்தை கெடுக்கிறது அல்லது தொடர்ந்து பெய்து கெடுக்கிறது என்று விவசாயி ஒருவர் கூறினார்.

Next Story