திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை பொங்கல் வியாபாரம் பாதிப்பு


திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை பொங்கல் வியாபாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2021 12:22 AM GMT (Updated: 14 Jan 2021 12:22 AM GMT)

திருச்சியில் வெளுத்து வாங்கிய மழையால் பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருச்சி, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 16-ந் தேதி வரை நீடிக்கும் என்றும், இலங்கை முதல் குமரிக்கடல் வரை நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விட்டு, விட்டு தூறல் மழையாக பெய்து கொண்டே இருந்தது. திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி காந்திமார்க்கெட், கடைவீதி பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் தரைக்கடை அமைத்து கரும்பு, மஞ்சள், பூ, பழம் போன்றவை விற்பனைக்கு குவித்து வைத்து இருந்தனர். ஆனால் தொடர் மழையின் காரணமாக பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைக்கு மார்க்கெட்டின் பல பகுதிகளில் கால் வைக்க முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதேபோல் ஒரு சில தெருக்களிலும் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சேறும், சகதியுமாக மாறியது. பொங்கல் பண்டிகையையொட்டி புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி கடைவீதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு சென்றனர்.

பயிர்கள் நீரில் மூழ்கின

இது தவிர, திருச்சியில் நேற்று காலை முதல் விடாமல் பெய்த மழையினால் வாகனங்கள் மெதுவாக சென்றன. மாநகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையினால் இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். மேலும், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜீயபுரம், லால்குடி, மணிகண்டம், அல்லூர், வயலூர், வாத்தலை, மண்ணச்சநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின. வழக்கமாக பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை தற்போது பொங்கல் பண்டிகையிலும் தொடர்ந்து வருவதால் பண்டிகையை எப்படி? கொண்டாடுவது என மக்கள் அதிர்ச்சியுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

Next Story