பொங்கல் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் தொடர் மழையால் விற்பனை பாதிப்பு + "||" + Pongal items People flocking to buy Sales impact due to continuous rains
பொங்கல் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் தொடர் மழையால் விற்பனை பாதிப்பு
திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். தொடர் மழையால் விற்பனை பாதித்தது.
திண்டுக்கல்,
தை திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகாலையில் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். இதற்கு தேவையான பொங்கல் பொருட்களை மக்கள் நேற்று வாங்கினர். இதற்காக திண்டுக்கல்லில் பலசரக்கு கடைகளில் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
பச்சரிசி, வெல்லம், நெய் உள்பட பொங்கல் பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். இதனால் பச்சரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது. மேலும் பலர் வெல்லத்தை தவிர்த்து நாட்டுச்சர்க்கரை, அச்சு வெல்லம் உள்ளிட்டவற்றை வாங்கினர். அதேபோல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடைகளில் 3 வகையான வெல்லம், 2 வகையான அச்சு வெல்லம் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொங்கல் வழிபாட்டின் போது முக்கியமாக இடம்பெறுவது கரும்பு, மஞ்சள்குலை ஆகியவை ஆகும். எனவே, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதற்காக திண்டுக்கல்லில் காந்தி மார்க்கெட் பகுதி, தாலுகா அலுவலக சாலை, மெயின்ரோடு, நாகல்நகர், பழனி சாலை உள்பட பல இடங்களில் நேற்று முன்தினமே கரும்பு கட்டுகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டன.
இங்கு நேற்று காலையில் இருந்தே கரும்பு விற்பனை களைகட்டியது. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் கரும்பை கட்டாக வாங்கி சென்றனர். ஒருசில இடங்களில் விவசாயிகளே நேரடியாக கரும்பு விற்பனை செய்தனர். அதேபோல் மஞ்சள்குலை ஜோடி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இதுதவிர கூரைப்பூ கட்டு ரூ.10-க்கு விற்கப்பட்டது.
இந்த கூரைப்பூ கட்டில் கூரைப்பூவோடு, மாவிலை, வேப்பிலை ஆகியவையும் இடம்பெற்று இருந்தன. அதையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் பொங்கல் நாளில் அனைத்து வீடுகளிலும் சைவ சமையல் பிரதானமாக இருக்கும். அதில் பலவகை காய்கறி பொறியல் இடம்பெறுவது உண்டு. இதனால் காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் அவற்றின் விலையும் உயர்ந்தது.
மார்க்கெட்டுக்கு நேற்று பூக்களின் வரத்து வழக்கமான பண்டிகை காலத்தை விட குறைவாகவே காணப்பட்டது. அதேநேரம் பொங்கல் பண்டிகைக்கு பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் பூக்களின் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அதன்படி நேற்று மட்டும் சுமார் 12 டன் பூக்கள் விற்பனை ஆனது.
அதேநேரம் வரத்து குறைவால் பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதில் மல்லிகைப்பூவை பொறுத்தவரை நேற்று கிலோ ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது. இதுதவிர கனகாம்பரம் பூ கிலோ ரூ.1,000-க்கும், முல்லைப்பூ ரூ.1,800-க்கும், சாதிப்பூ ரூ.1,200-க்கும், காக்கரட்டான் பூ ரூ.1,000-க்கும், ரோஜா ரூ.200-க்கும், சம்பங்கி பூ ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், செண்டுமல்லி மற்றும் கோழிக்கொண்டை பூ தலா ரூ.60-க்கும் விற்பனை ஆனது. பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. இதனால் மக்கள் குடையை பிடித்தபடி பொருட்களை வாங்கினர். அதேநேரம் காலை முதல் மதியம் வரை கரும்பு, மஞ்சள்குலை உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மாலை 4 மணிக்கு மேல் மழை குறைந்தது. அதன்பின்னரே பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது. அப்போது திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் திண்டுக்கல்லில் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.