தொடர் மழையால் வேகமாக நிரம்பும் நீர் நிலைகள்


தொடர் மழையால் வேகமாக நிரம்பும் நீர் நிலைகள்
x
தினத்தந்தி 14 Jan 2021 4:10 AM GMT (Updated: 14 Jan 2021 4:10 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வழக்கமாக மாவட்டத்தின் கிழக்குப் பகுதி வறண்டு காணப்படும். ஆனால் கடந்த 4 நாட்களாக காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் சராசரியாக 16 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தை ஒட்டி இருந்தாலும் அந்தப்பகுதிகளில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.

விருதுநகரில் கடந்த 2 நாட்களாக 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மார்கழி மாதம் பனி பெய்ய தொடங்கிய உடன் மழை பெய்வது குறைந்துவிடும். ஆனால் தற்போது மாறுபட்ட சூழ்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது விவசாயிகளை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நேற்றும் தொடர்ந்து பரவலாக மழை பெய்ததால் பொங்கல் பொருட்கள் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆறுகள்

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாணிப்பாறை, பிளவக்கல் அணை, அத்தி கோவில் ஆறு, பாப்பனத்தன் பெருமாள் கோவில் ஆறு, களனி ஆறு, அர்ச்சுனா நதி உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் சாஸ்தா கோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்த அணை மற்றும் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி விட்டது. மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. 

Next Story