சேலம் மாவட்டத்தில் கிராமங்களில் ‘களை’ கட்டிய மாட்டுப்பொங்கல்


தேவூர் அருகே சென்றாயனூர் தெற்கு தோட்டம் கிராமத்தில் கால்நடைகளுக்கு பூஜை செய்யப்பட்ட போது எடுத்த படம்.
x
தேவூர் அருகே சென்றாயனூர் தெற்கு தோட்டம் கிராமத்தில் கால்நடைகளுக்கு பூஜை செய்யப்பட்ட போது எடுத்த படம்.
தினத்தந்தி 15 Jan 2021 9:08 PM GMT (Updated: 15 Jan 2021 9:08 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று கிராமங்களில் மாட்டுப்பொங்கல் களைகட்டியது.

மாட்டுப்பொங்கல்
உழவர்களுக்கு மாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப்பொங்கல் களை கட்டியது.

தலைவாசல் பகுதியில் நேற்று மாட்டுப்பொங்கல் விமரிசையாக விவசாயிகள் கொண்டாடினார். சிறுவாச்சூர், புத்தூர், வரகூர், நாவக்குறிச்சி, ஆரகலூர் மணிவிழுந்தான், பட்டுதுறை, காட்டுக்கோட்டை, சதாசிவபுரம் சாத்தப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்களது மாடுகளை அருகில் உள்ள ஏரிகளிலும், வசிஷ்ட நதியிலும் குளிப்பாட்டினார்கள். பின்னர் மஞ்சள், குங்குமம் தூவி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்தனர். பின்னர் கால்நடைகளுக்கு சர்க்கரைப்பொங்கல், வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்தனர்.

இதேபோல் வீரகனூர் பகுதியிலும் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடினர். மேலும் விவசாயிகள் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து வெகுவிமரிசையாக கொண்டாடினார்கள்.

கால்நடைகளுக்கு மரியாதை
தேவூர் அருகே சென்றாயனூர் தெற்கு தோட்டம் பகுதியில் விவசாயிகள் பசு, ஆடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். மேலும் விவசாயிகள் கால்நடைகளை குளிக்க வைத்து, வண்ணப்பொடிகள் தூவி கொம்புக்கு வர்ணம் பூசினார்கள். மேலும் கால்நடைகள் முன்பு பச்சரிசி பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இந்த கிராம மக்கள் 100 ஆண்டுகளாக பராம்பரியம் மாறாமல் மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல எடப்பாடி, மேட்டூர், மேச்சேரி, வாழப்பாடி, சங்ககிரி என மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் நேற்று மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

Next Story