பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


ஆரணி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
ஆரணி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தினத்தந்தி 16 Jan 2021 8:30 PM GMT (Updated: 16 Jan 2021 8:09 PM GMT)

பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு 50 நாட்களாக வந்து கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் திறப்பு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 35 அடி ஆகும். இதில் 1.853 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதையடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி அணையில் இருந்து ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அன்று முதல் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு கனரக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று மார்க்கத்தில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

தண்ணீர் நிறுத்தம்
இந்த நிலையில் மழை முழுவதுமாக நின்று விட்டதால் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக நின்றுவிட்டது. இதனை கருத்தில் கொண்டு தொடர்ந்து 50 நாட்களாக ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. 5 வருடங்களுக்கு முன் தொடர்ந்து 40 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டது சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை மிஞ்சும் விதமாக தொடர்ந்து 50 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story