மாவட்ட செய்திகள்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர் + "||" + Madurai Alankanallur Jallikattu: 600 players play with 719 bulls

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 719 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளுடன் மல்லுக்கட்டினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டுகள் பல இருந்தாலும், அதில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு விழா நடக்கும்.

அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அங்குள்ள கோட்டை முனியசுவாமி திடல் முன்பாக உள்ள வாடிவாசலில் நேற்று காலை 8.35 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

போட்டி போட்டனர்
தொடர்ந்து கால்நடைத்துறை டாக்டர்களின் பரிசோதனைக்கு பின் தேர்வு செய்யப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி, தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த போட்டியில் காளைகளும், வீரர்களும் பங்கேற்றனர்.

முரட்டு காளைகளை பிடிக்க வாடிவாசல் முன்பு பச்சை, மஞ்சள், நீல நிற பனியனும், டவுசரும் அணிந்திருந்த மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை மடக்கிப் பிடித்தனர். பல காளைகள் வீரர்களுக்கு சவால் விட்டு துள்ளிக் குதித்து ஓடின.

சுமார் 100 அடி தூரத்தில் வாடிவாசல் எல்லைக்கொடி கட்டப்பட்டிருந்தது. வேகமாக வரும் காளைகள் சறுக்கி விழுந்தாலும், மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசல் முன்பாக உள்ள மைதானத்தில் தென்னை நார்கள் சுமார் 150 அடி தூரத்திற்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

திமில் கொண்டு துள்ளிக் குதித்த காளைகளை, அங்கிருந்த காளையர்கள் மடக்கி பிடித்ததற்காகவும், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், அண்டா, குண்டா, பானை, பித்தளை குத்துவிளக்குகள், சைக்கிள், செல்போன், சேர்கள், டிராவல் பேக், ரொக்கப்பணம் உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

719 காளைகள்
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. இதில் 719 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. போட்டிக்கான நேரம் முடிந்து விட்டதால் மீதமுள்ள காளைகளுக்கு பரிசுகள் மட்டும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டன. இதே போன்று பதிவு செய்த வீரர்களில் 600 பேர், காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 75 வீரர்கள் மட்டும் களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

48 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்தனர். இதில் அலங்காநல்லூரை அடுத்த காந்திபுரம் தவமணி (வயது 24) உள்பட 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மைதானத்தில் 5-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது சீருடைகளை பறிமுதல் செய்து, மைதானத்தை விட்டு வெளியேற்றினர். மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், கலெக்டர் அன்பழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராம்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடு
விழாவையொட்டி குடிதண்ணீர், பொது சுகாதார ஏற்பாடுகளை பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் மேற்பார்வையில் செயல் அலுவலர்கள் சின்னசாமிபாண்டியன், தேவி மற்றும் இளநிலை உதவியாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் தென்மண்டல ஐ.ஜி.முருகன், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

கார் பரிசு
போட்டியில் பங்கேற்று 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணனுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 மாடுகளை அடக்கிய அரிட்டாபட்டி கருப்பணனுக்கு 2 நாட்டு கறவை மாடுகள் பரிசாக வழங்கப்பட்டது. 8 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் சக்திகுமாருக்கு ஒரு பவுன் தங்கக்காசு பரிசாக அளிக்கப்பட்டது.

இதேபோல நீண்ட நேரம் வாடிவாசலில் நின்று விளையாடி, வீரர்களுக்கு போக்கு காட்டிய குருவித்துறை எம்.கே.எம்.சந்தோசுக்கு சொந்தமான காளை, முதல் பரிசான காரை தட்டிச்சென்றது. 2-வது பரிசை மேலமடை அருண் என்பவரின் காளையும், 3-வது பரிசை சரந்தாங்கி மீசைக்காரன் என்பவரின் காளையும் பெற்றன.

முதல் இடத்தை பிடித்த காளை, வீரருக்கு பரிசாக அறிவிக்கப்பட்ட கார்களை, சென்னையில் முதல்-அமைச்சர் நேரில் விரைவில் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை: புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
2. மதுரையில் மல்லிகை ஏற்றுமதி மையம்; மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்
மதுரையில் மல்லிகை ஏற்றுமதி மையம் அமைய உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
3. தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட திட்டம்
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
5. தி.மு.க. ஆட்சி என்றைக்கும் ஏழை மக்களுக்கான ஆட்சியாக இருந்ததில்லை; மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. ஆட்சி என்றைக்கும் ஏழை மக்களுக்கான ஆட்சியாக இருந்ததில்லை என மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.