புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன


புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
x

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பலரது வீட்டின் மண் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கந்தர்வகோட்டை பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுமி உயிரிழந்தார்.

இந்தநிலையில், தொடர் மழையின் காரணமாக அன்னவாசல் அருகே உள்ள கதவம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் முருகேசன் பாதிக்கப்பட்ட வீட்டினை பார்வையிட்டு அந்த குடும்பத்தினரை அருகில் உள்ள பள்ளிக்கட்டிடத்தில் தங்கவும், பின்னர் அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு அந்த வீட்டை பழுது பார்க்கவும் நடவடிக்கை எடுத்தார்.

மூதாட்டி படுகாயம்

கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த வேலாயுதம் மனைவி பாஞ்சாலை (வயது 67) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பாஞ்சாலையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கோட்டைப்பட்டினம்

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (60). இவர் அதே பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கோட்டைப்பட்டினம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜூ மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Next Story