ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்


ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 17 Jan 2021 4:25 AM GMT (Updated: 17 Jan 2021 4:25 AM GMT)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. அதை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

நாகர்கோவில், 

கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, செண்பகராமன்புதூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி முகாமை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று ப பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

20,564 பணியாளர்கள்

தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பூசி முகாமை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, குழித்துறை தாலுகா மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 முகாம்களில் கொரோனா தடுப்பூசி இன்று (நேற்று) போடும் பணி நடைபெறும். முதலாவதாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஸ்கேன் சென்டர்கள், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் என 1147 நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 20,564 பணியாளர்களின் பெயர்கள் ஏற்கனவே COWIN செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடவுள்ள நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் நாள், இடம், நேரம் ஆகிய தகவல்கள் அவர்களுடைய கைப்பேசிக்கு குறுந்தகவலாக COWIN செயலி மூலம் அனுப்பப்படும். அவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் போது கொடுத்த அடையாள அட்டையுடன் வந்து முகாமில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு முகாமில் ஒரு நாளைக்கு 100 நபர்கள் என 4 மையங்களில் 400 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கட்டாயமாக இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியினையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி மருந்துகள்

பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கியவுடன் அவர்களின் கைப்பேசிக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கப்பட்ட விவரம் குறுந்தகவலாக அனுப்பப்படும். முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குப்பின் இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்படும். குமரி மாவட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கோவி‌ஷீல்ட் தடுப்பூசி மருந்து 22,600 பொதுசுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு, சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.. இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

காணொலி காட்சி

முன்னதாக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன் உள்ளிட்ட டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, சூப்பிரண்டு அருள்பிரகா‌‌ஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜன், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தடுப்பூசி போடும் பணி தொடங்குவதற்கு முன்பாக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தொடங்கி வைத்து பேசிய நிகழ்ச்சியும், மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த நிகழ்ச்சியும் காணொலி காட்சி மூலம் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

55 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்

குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நாள் ஒன்றுக்கு ஒரு மையத்துக்கு 100 பேர் வீதம் 400 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று மாலை 5 மணி வரை 55 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதில் 34 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், 6 பேர் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 4 பேர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும், 11 பேர் செண்பகராமன்புதூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி போட்டனர். அச்சம் காரணமாக முதல்நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி, முகாம்கள் கிடையாது. நாளை (திங்கட்கிழமை) முதல் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Next Story