கோவை பகுதியில் பரபரப்பு : வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை திருட்டு - என்ஜினீயர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை


கோவை பகுதியில் பரபரப்பு : வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை திருட்டு - என்ஜினீயர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 17 Jan 2021 4:07 PM GMT (Updated: 2021-01-17T21:37:53+05:30)

வியாபாரி வீட்டில் 100 பவுன் தங்க நகை திருட்டு போனது. என்ஜினீயர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணபதி,

கோவை ரத்தினபுரி ராஜேந்திர பிரசாத் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது42). நெய் வியாபாரி. இவர் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்றார். அவரது வீட்டில் புஷ்பா என்ற பெண் வீட்டு வேலை செய்து வருகிறார்.

அவர், நேற்று காலை கார்த்திக்கின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் செல்போன் மூலம் கார்த்திக்கின் தாயாரிடம் தகவல் தெரிவித்தார்.

இதை அறிந்த கார்த்திக் ரத்தினபுரி போலீசில் புகார் கூறினார். அப்போது வீட்டில் 100 பவுன் நகை வைத்திருந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக், வெளியூரில் இருந்து வந்தால் தான் வீட்டில் எவ்வளவு நகை, பணம் திருட்டு போனது என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி ராகவா நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (40). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலையில் விக்னேசின் வீட்டு கதவு உடைந்து இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் விக்னேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் விக்னேஷ் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் படுக்கை அறையில் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். கோவையில் வியாபாரி, என்ஜினீயர் ஆகியோரின் வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story