கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறப்பதையொட்டி தூய்மை பணி
கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறப்பதையொட்டி நேற்று தூய்மை பணிகள் நடந்தது.
கரூர்,
கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 19-ந்தேதி (இன்று) முதல் பள்ளிகளை திறப்பது என தமிழக அரசு முடிவு எடுத்தது. இதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தூய்மை செய்யும் பணி
இதையடுத்து பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு தயாராக வைத்திருக்கும் படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வளாகத்தை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றன.
மேலும், மாணவர்களை போதிய இடைவெளியில் வகுப்பறையில் அமர வைப்பதற்காக இருக்கைகளை சரி செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மேலும், வகுப்பறைகளும் தூய்மை செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் லேப்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மை செய்யும் பணி நடந்தது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய தானியங்கி கிருமிநாசினி வைக்கப்பட்டது. 9 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story