வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலை: யாரும் கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேர்


வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலை: யாரும் கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேர்
x
தினத்தந்தி 19 Jan 2021 10:35 AM IST (Updated: 19 Jan 2021 10:35 AM IST)
t-max-icont-min-icon

வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலையில் யாரும் தங்களை கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் 2-ம் சேத்தி கிராமம் அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது30). கூலித்தொழிலாளி. இவர் தனது பெரியப்பா மகன் மனோகரன் மற்றும் அவருடைய மனைவி மகேஸ்வரி ஆகியோருடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்றுகாலை வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், இவர்கள் 3 பேரும் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அப்போது ஒரு பையில் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். உடனே அந்த பெட்ரோல் பாட்டிலை வேறு இடத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் எதற்காக பெட்ரோல் பாட்டிலுடன் வந்தீர்கள்? என 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

எச்சரித்த போலீசார்

அப்போது அவர்கள், தொடர் மழையால் நாங்கள் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் ஒழுகுகிறது. வீட்டை சுற்றிலும், வீட்டிற்குள்ளும் தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டில் வசிக்க முடியாத காரணத்தினால் கோவிலில் தான் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு தான் வீடு கட்டி கொடுத்தது. இப்போது இடியும் நிலையில் உள்ளதால் புதிதாக வீடு கட்டி கொடுக்க வேண்டும். மிகவும் ஏழ்மையில் வாடும் எங்களது துயரத்தை போக்க யாரும் முன்வரவில்லை. இதனால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெட்ரோல் கேனுடன் வந்தோம் என தெரிவித்தனர்.

அவர்கள் 3 பேரையும் எச்சரித்த போலீசார், மனு எழுதிவரச் சொல்லி அறிவுறுத்தினர். அவர்கள் மனு எழுதி வந்தவுடன் அவர்களை போலீசார் அழைத்து சென்று அதிகாரிகளை சந்திக்க வைத்தனர். அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு 3 பேரும் வீட்டிற்கு சென்றனர்.

Next Story