மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2021 12:42 AM IST (Updated: 21 Jan 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு, எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டயபுரம்,

எட்டயபுரம் தாலுகா உள்ளிட்ட மாவட்டத்தின் மானாவாரியில் விவசாயம் செய்துள்ள பருத்தி, உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள், பருவம் தவறிய மழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கி மிகப்பெரிய சேதமடைந்துள்ளது. உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர் வகைகள் முளைத்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களில் படைப்புழுக்களும், புழுக்களும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதனால் தங்களுடைய ஒரு வருட உழைப்பின் பயன் வீணாகிய நிலையில் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து விவசாயம் பார்த்த விவசாயிகள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத்தை உடனே மாநில அரசு வழங்ககோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில், எட்டயபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மனு கொடுத்தனர்

தாலுகா அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கட்டுமான சங்கத்தின் தாலுகா செயலாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளைச் செயலாளர் முருகேசன், சுரைக்காய்பட்டி, நீராவி புதுப்பட்டி, மண்ண கோபாலநாயக்கன்பட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

Next Story