ஜோலார்பேட்டை அருகே, மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா- அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை அருகே மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். காளைகள் முட்டி 45 பேர் காயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அருகே மூக்கனூர் கிராமத்தில் 50-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு ஊர்கவுண்டர் சிகாமணி தலைமை தாங்கினார். ஊர் நாட்டாண்மை திருமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக் குழு உறுப்பினர் புஷ்பராஜன் வரவேற்றார். திருவிழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று எருது விடும் திருவிழாவை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 270 காளைகள் போட்டியில் பங்கேற்றன. கால்நடை டாக்டர், மருத்துவப் பரிசோதனை செய்து காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதித்தார்.
இதையடுத்து காளை விடும் திருவிழா உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் தாசில்தார் மோகன், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. காளைகள் மூட்டியதில் அடக்க முயன்ற 45 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் மீனாட்சி தலைமையில் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
போட்டியில் பங்கேற்று வேகமாக ஓடிய திருப்பத்தூர் காளைக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், அனேரி பகுதியைச் சேர்ந்த காளைக்கு 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காளைக்கு 3-வது பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டன. அதேபோல் வேகமாக ஓடிய 25 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளை விடும் திருவிழாவில் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் பங்கேற்றனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story