144 தடை உத்தரவை விலக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகை


144 தடை உத்தரவை விலக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Jan 2021 5:50 AM IST (Updated: 23 Jan 2021 5:50 AM IST)
t-max-icont-min-icon

144 தடை உத்தரவை விலக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 210 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், சட்டசபை வளாகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வந்து செல்ல முடியாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 3வாரங்களாக இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சுற்றுலா பயணிகள், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை குழுவை கூட்டி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தடுப்புகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆனாலும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்லும் சில தடுப்புகள் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டன.

தரையில் அமர்ந்து தர்ணா

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை உடனடியாக விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சியின் துணை பொதுச் செயலாளர் பாவாணன் தலைமையில் திரண்டனர்.

இதில் தொகுதி செயலாளர்கள் தீந்தமிழன், ஈகை அரசு, அன்பரசி, தியாவல்லி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே தடை உத்தரவை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தியும் திரும்பப்பெறாததால் இதுகுறித்து அதிகாரிகளை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டு அங்கு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

210 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் தடுப்புகளை அமைத்து நுழைவாயிலை இழுத்து மூடினர்.

ஆனால் அதை தள்ளி விட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷம் போட்டபடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 46 பெண்கள் உள்பட 210 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்து சமுதாயக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்கள் சிறிது நேரத்துக்குப் பின் போலீசாரால் விடுவிக்கப்பட்டனர்.

Next Story