அரியலூர் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்


அரியலூர் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்
x
தினத்தந்தி 29 Jan 2021 12:21 AM GMT (Updated: 29 Jan 2021 12:23 AM GMT)

அரியலூர் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.

அரியலூர்,


அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று தைப்பூச விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அரியலூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு செட்டிஏரி கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். கோவிலில் முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல் மேலத்தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோவிலில் புதிதாக முருகன், வள்ளி, தெய்வானை விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ராஜாஜி நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

சிறப்பு அலங்காரம்

அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. காலை முதலே பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தா.பழூர், உடையார்பாளையம்

தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்திய வேலவருக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்லேந்திய வேலவர் வண்ண மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சிக்கு சைவ பிள்ளைமார் மரபினர் ஏற்பாடு செய்திருந்தனர். தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், முருகப்பெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடையார்பாளையம் அருகே உள்ள காமரசவள்ளி கிராமத்தில் கார்கோடிஸ்வரர் பாலாம்பிகை கோவிலில் நேற்று பவுர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து, 108 மூலிகை பொருட்களை கொண்டு யாகம் வளக்கப்பட்டது. பின்னர் கார்கோடிஸ்வரர், பாலாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16  வகையான பொருட்களால்  அபிஷகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விபூதி, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

வி.கைகாட்டி

வி.கைகாட்டி பகுதியில் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர். 23 அடி உயரம் கொண்ட முருகர் சிலைக்கு மாலையில் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story