தமிழிசை சவுந்தரராஜன்


தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 31 Jan 2021 5:42 AM GMT (Updated: 31 Jan 2021 5:42 AM GMT)

கொரோனா தடுப்பூசி எந்த ஆபத்தும் இல்லாதது. எனவே அனைவரும் பயமின்றி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று பழனியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பழனி:

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கணவருடன் பழனி முருகன் கோவிலில் நேற்று சாமிதரிசனம் செய்தார். 

முன்னதாக தனியார் தங்கும் விடுதிக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. 

தொடர்ந்து பழனி முருகன் கோவில் சார்பில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் பூங்கொத்து, நினைவு பரிசு கொடுத்து வரவேற்றனர்.


பின்னர் அவரது கணவர் சவுந்தரரராஜன் முடிக்காணிக்கை செலுத்தினார். இதையடுத்து ரோப்கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா இல்லாத இந்தியா உருவாக நம் நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெருமை பட வேண்டிய விஷயமாகும். 

இதற்கு பிரதமர் மோடியின் ஊக்குவிப்பு, விஞ்ஞானிகளின் விடா முயற்சியே காரணம். கொரோனா தடுப்பூசி எந்த ஆபத்தும் இல்லாதது. எனவே அனைவரும் பயமின்றி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி
மேலும் நம் நாட்டில் இருந்து 150 நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி கொண்டு இருக்கிறோம். சுயச்சார்பை நோக்கி நம் நாடு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. 

எனினும் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். வரும் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தைப்பூசத்துக்கு விடுமுறை அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன். 

இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகையையொட்டி பழனியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story